தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு இடைத்தேர்தல்: அண்ணனை விஞ்சிய தங்கை - " 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி!" - WAYANAD BY ELECTION RESULTS

கேரளாவின் வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 6,22,338 வாக்குகளை பெற்றிருந்தார்.

பிரியங்கா காந்தி கோப்புப் படம்
பிரியங்கா காந்தி கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 12:14 PM IST

கேரளா:கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்ட பிரியங்கா காந்தி வத்ரா காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னிலை வகித்து வந்தார்.

முன்னதாக, வயநாடு மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வேட்பாளராக களம் கண்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் ரேபரேலி மக்களவைத் தொகுதி எம்.பியாக பொறுப்பெற்ற நிலையில் வயநாடு தொகுதியில் எம்.பியாக பொறுப்பெற்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலை 8 மணியளவில் மின்னஞ்சல் வாக்குகளில் இருந்து வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. அதிலிருந்து பல்வேறு கட்ட வாக்கு எண்ணிகை சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின், காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 1,21,476 வாக்குகள் பெற்று, 85,533 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ சத்யன் மொகேரியை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்தார்.

இதையும் படிங்க:கர்நாடகா இடைத்தேர்தல்: மூன்றில் இரண்டு தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை!

மேலும் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா எண்ணப்பட்ட 3,73,424 வாக்குகளில் 2,39,554 வாக்குகளை பெற்று 64.15 விழுக்காடு வாக்குகளை தன்வசப்படுத்தி தொடர் முன்னிலை வகித்து வருகிறார்.

ராகுலை முந்திய பிரியங்கா:

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 6,22,338 வாக்குகள் பெற்று, 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரியங்காவுக்கு அடுத்தபடியாக சிபிஐ வேட்பாளர் சத்தியன் மொகேரி 211407 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 109939 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் தனது போட்டியாளரான சிபிஐயின் அன்னி ராஜாவை எதிர்த்து வெற்றி பெற்றார். இதுவே, 2019-இல் அவர் 7,06,367 வாக்குகள் பெற்று, 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் QR குறியீடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details