டெல்லி:மக்களவை தேர்தலுக்கு பின் நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பீகார் மாநிலத்தின் ருபவுலி, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மத்திய பிரதேசத்தின் அமரவரா, பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலுர், மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்ஷின், பாக்டா, மணிக்தலா மற்றும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று (ஜூலை.13) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்த தேர்தல் நடைபெற்று உள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்புடன் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.