இட்டாவா:உத்தரப் பிரதேசம், இட்டாவா மாவட்டத்தின் உஸ்ராஹர் பகுதியில் இன்று நள்ளிரவில் நடந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்களின்படி, நாகாலாந்து பதிவெண் கொண்ட ஸ்லீப்பர் பஸ் ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது, நள்ளிரவு 12.45 மணியளவில் தவறான பாதையில் வந்த கார் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர், பேருந்தில் பயணித்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். கார் உட்பட பேருந்தில் பயணித்த 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், விபத்து குறித்து இட்டாவா போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குமார் கூறுகையில், “லக்னோவில் இருந்து ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் தூங்கியதால் கார் தவறான பாதையில் நுழைந்திருக்க வேண்டும். அப்போது, அவ்வழியே வந்த பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
விபத்து நடந்தவுடன், அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் திரண்டுள்ளனர். பின்னர் இட்டாவாவின் பஸ்ரேஹர், சௌபியா, பர்தானா, உஸ்ரஹர் மற்றும் சைபாய் காவல் நிலையங்களின் போலீஸ் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாகனங்களில் இருந்து காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சைபாய் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்தில் சுமார் 60 பேர் இருந்ததாக எஸ்பி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
உ.பி. அரசு இரங்கல்:பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அயோத்தி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 'டிஎன்ஏ டெஸ்ட் தேவை'.. அகிலேஷ் யாதவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை!