ஜோத்பூர்:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.26) காலமானார். 92 வயதான மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், '' டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுடன் பொருளாதார சீர்திருத்தங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டுக்கு புதிய வேகத்தையும், திசையையும் ஏற்படுத்தின'' என்றார்.
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், '' மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த டாக்டர் மன்மோகன் சிங், உலகின் சில மதிப்புமிக்க நிறுவனங்களில் படித்து, தேசத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தார். ஒரு பொருளாதார நிபுணராகவும், இந்தியாவின் தற்போதைய பொருளாதார தாராளமயமாக்கலின் முன்னோடியாகவும் அவர் நினைவுகூரப்படுவார்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, '' நம் நாடு ஒரு அரசியல்வாதியை மட்டுமல்ல, ஒரு பொருளாதார நிபுணரையும் இழந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள சாதாரண கிராமத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக மாறிய அவரது பயணம், தேசத்திற்கு சேவை செய்வதில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை காட்டுகிறது. மன்மோகன் சிங் தனது எளிமைக்காகவும், பொருளாதார முன்னேற்றங்களுக்கான முக்கிய முடிவுகளுக்கு எப்போதும் நினைவுகூரப்படுவார். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.