டெல்லி: ரயில்வே துறையில் உள்ள 11,72,240 ஊழியர்களுக்கு, ரூ.2,028.57 கோடி மதிப்பீட்டில் 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதியான ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை/ தசரா பண்டிகையை முன்னிட்டு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் 11,72,240 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத் தொகை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யாருக்கெல்லாம் போனஸ்? அதன்படி, ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சரகப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் சி ஊழியர்கள் என பல்வேறு வகை ரயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
6.7 பில்லியன் பயணிகள்:மேலும், ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும், ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் ஊழியர்களை அங்கீகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, 2023 - 2024ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ஓராண்டில் 1,588 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளது என்றும், சுமார் 6.7 பில்லியன் பயணிகள் பயணத்துக்கு ரயில்வே சேவை புரிந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும், இந்தச் சாதனைக்கு, ரயில்வே உள்கட்டமைப்பில் உள்ள முன்னேற்றம், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சரவை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆறாவது மத்திய ஊதியக் குழுவிற்குப் பதிலாக, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில், உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட போனஸை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அமைச்சரவையின் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்