கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷேக் ஷாஜகான் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து, ஷேக் ஷாஜகானை கைது செய்யக் கோரி, எதிர்கட்சியான பாஜகவினர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஷாஜகான் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனிடையே, ஜன.5ஆம் தேதி ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஷாஜகானுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளை, அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், ஷாஜகானை கைது செய்யவிடாமல், திரிணாமுல் காங்கிரஸ் அரசு பாதுகாப்பதாகவும், இது தொடர்பாக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் தெரிவித்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ஷேக் ஷாஜகான் இன்னும் 7 நாள்களில் கைது செய்யப்படுவாா் என்றும், ஷேக்கை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கவில்லை எனவும், இந்த விவகாரத்தில் காவல்துறையின் கைகளை நீதிமன்றம்தான் கட்டிப் போட்டிருக்கிறது எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையில், சந்தேஷ்காளி விவகாரத்தில் ஷேக் ஷாஜஹான் மீது சுமார் 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், அவர் மீது மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரி தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பர்மஜுர் பகுதியில் ஷாஜஹானுடன் தொடர்புடைய அஜீத் மைதி என்ற நபரை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் விரட்டிச் சென்றதால், அவர் அங்குள்ள வீடு ஒன்றில் தஞ்சமடைந்து, சுமார் 4 மணி நேரம் பதுங்கியிருந்தார். பின்னர் அவா் மீதும், பொதுமக்கள் நில அபகரிப்பு புகார்களை அளித்தனர், இதனால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் பர்மஜுர் பகுதி தலைவராக அஜீர் மைதி நியமிக்கப்பட்டு, சுமார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த பிப்.26ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், "குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகானை கைது செய்ய எந்த தடையும் இல்லை எனவும், முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார், ஆகவே அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டது.
இதனிடையே, திங்கள்கிழமை (பிப்.26) சந்தேஷ்காளியின் சில பகுதிகளில் திரிணாமுல் பிரமுகர்களின் வீடுகளை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சூறையாடினர். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தங்கள் நிலங்களை திரும்பப் பெறுவதற்கான காரியங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதனையடுத்து பிப்.28ஆம் தேதி வன்முறையால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளியைப் பார்வையிட 6 பேர் கொண்ட உண்மை அறியும் குழுவிற்கு அனுமதி வழங்கி, கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்.26ஆம் தேதி திங்கட்கிழமை ஷேக் ஷாஹஹானை கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று காலையில் அவரை கைது செய்த போலீசார், பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஷேக் ஷாஜஹான் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கியுள்ளதாக அந்த கட்சியின் எம்.பி டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம்; மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து!