பலங்கிர்(ஒடிசா):நிலத்துக்குள் டிராக்டரை ஓட்டி பயிரை சேதப்படுத்தியதை தட்டி கேட்ட பழங்குடியினப்பெண்ணை தாக்கி அவரது வாயில் மலத்தை திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய போலீசார், "ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஜுரபந்தா கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி பழங்குடியினத்தை சேர்ந்த இளம் பெண் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் வயலுக்குள் டிராக்டரை இறக்கி பயிரை சேதப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த இளம் பெண் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அருகில் உள்ள குளத்துக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்த கொண்டிருந்த இளம் பெண்ணை வழிமறித்த டிராக்டர் ஓட்டுநர் அவரை தாக்கி உள்ளார். மேலும் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மனித மலத்தை திணித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். இளம் பெண்ணை தாக்கிய நபர் அபய் பாக் என்பது தெரியவந்துள்ளது.
பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்து அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். விரைவில் அவரை கைது செய்வோம்,"என்று கூறினர்.