குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் வடக்கு குப்வாரா மாவட்டத்தின் மச்சில் மற்றும் தங்தார் எல்லைப் பகுதியில் நடந்த இரு என்கவுன்டரில் குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் பகுதிகளில் நேற்றிரவு பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, இந்த பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், பயங்கரவாதிகள் யாரும் ஊடுருவ முயல்கின்றனரா? என்று கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பாகச் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி தொகுதி பங்கீடு நிறைவு!