அமராவதி: திருப்பதி லட்டு பிரசாத விவகாரத்தில், தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மத விஷயங்களை அரசியலாக்குகிறது என ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் பிரசாத லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"எங்க நெய் சுத்தமானது" - திருப்பதி லட்டுக்கு நெய் கொடுத்த தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்!
இந்நிலையில், அமராவதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"திருப்பதி லட்டு தயாரிப்புக்கு மூலப் பொருள் கொள்முதல் டெண்டர் செயல்முறை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை நடைபெறுகிறது. தகுதி அளவுகோல் பல தசாப்தங்களாக மாறவில்லை. மூலப்பொருள் விநியோகஸ்தர்கள் என்ஏபிஎல் சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் நெய்யிலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது. மேலும், சான்றிதழைப் பெற்ற தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தெலுங்கு தேசம் கட்சி, மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக நானே பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். இந்திய தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதுகிறேன். சந்திரபாபு நாயுடு உண்மைகளை எப்படி திரித்தார், அப்படி செய்ததற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து அவர்களுக்கு விளக்குகிறேன்." என்றார்.