டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்தும், இடைக்கால நிவாரணம் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்தது.
மேலும், அமலாக்கத்துறையின் கைதை சட்டவிரோதம் எனக் கருத முடியாது என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்நிலையில், இன்று (ஏப்.15) மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தட்டா ஆகியோரின் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா ஆகியோர் ஆஜ்ராகினர்.
மதுபான முறைகேடு வழக்கில் விசாரணை அமைப்பின் கைதை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்க உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் வழக்கின் விசாரணையை குறுகிய நாட்களுக்குள் மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க :வான்கடே மைதானத்தில் மாயாஜாலம் செய்த தோனி.. புதிய சாதனைக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்! - MS Dhoni Hat Trick Sixes