டெல்லி:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதாவது ஒரு வழக்கில் காவலில் இருப்பதால், அதற்கு தொடர்பில்லாத மற்றொரு குற்றத்திற்காக முன் ஜாமீன் (முன் பிணை) பெற ஒருவருக்கு உரிமை உண்டு என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
வழக்கு தொடர்பான தீர்ப்பை வாசித்த நீதிபதி பர்திவாலா, விரிவான தீர்ப்பு இன்றைய தினமே வெளியிடப்படும் என்று தெரிவித்தார். வேறு ஒரு குற்றத்திற்காக காவலில் இருக்கும் ஒரு குற்றவாளிக்கு உயர் நீதிமன்றமோ, மாவட்ட குற்றவியல் நீதிமன்றமோ முன் ஜாமீன் வழங்குவதை தடுக்க, வெளிப்படையான அல்லது மறைமுகமாக எந்த சட்ட விதிகளும் இல்லை என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
இதுதொடர்பாக வழக்காடிய வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை ஆகிய அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.