டெல்லி:நீட் தேர்வு குளறுபடிகள் குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன்.18) விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், நீட் தேர்வில் 0.001 சதவீதம் அளவு குளறுபடி நடந்திருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும் என்றும், யார் ஒருவர் அலட்சியமாக செயல்பட்டு இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
முறைகேடுகள் செய்து அதன் மூலம் மருத்துவராகும் தனிநபர் ஒட்டுமொத்தமாக அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறக் கூடிய சூழலை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வரும் நிலையில், இந்த முறைகேடு புகார்களால் அவர்களது கனவு கலையும் வண்ணம் மாறிவிடக் கூடாது என்றும் தெரிவித்தனர்.
தேசிய தேர்வு முகமை நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், தவறு ஏதேனும் நடந்திருந்தால் அதை ஒப்புக் கொண்டு அதை சரி செய்வதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும், அதன் மூலம் தேர்வு முகமையின் செயல்திறன் மீது குறைந்தபட்ச அளவிலான நம்பிக்கையை கொண்டிருக்க உதவும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்கக் உத்தரவிட்டு நீதிபதிகள் நோட்டீஸ் வழங்கினர். இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது.