டெல்லி: மாநில எல்கைகளில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு வரி விதிக்க அம்மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிடக் கோரி தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு மத்திய அரசு வழங்கும் ராயல்டியை வரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கனிம வள உரிமைகளை அனுபவிப்பதற்காக குத்தகைதாரருக்கு சுரங்க குத்தகைதாரர் செலுத்தும் ஒப்பந்த தொகையாக ராயல்டியை கருத்தில் கொள்ள முடியும் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்தார்.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வரி விதிப்பு அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். முன்னாதாக 9 நீபதிகள் கொண்ட அமர்வில் 8 நீதிபதிகள் மாநில அரசுகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி நாகரத்னா மட்டும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பு வழங்கினார்.
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் பெறும் ராயல்டி தொகை ஒரு வகையில் வரி வசூலுக்கான ஆதரமாக காணப்படுவதாகவும் கனிம வள வளர்ச்சியின் நலனுக்காக குத்தகைதாரர் வரி மற்றும் வாடகையை குத்தகைதாரரால் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாந்லங்கள் அதிக அளவில் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கனிம வளங்களில் மாநில அரசுக்கு வரி விதிக்க உரிமை கிடையாது என இந்தியா சிமென்ட்ஸ், ஒரிசா சிமென்ட்ஸ், மகாநதி கோல்ஸ் உள்ளிட்ட கனிம வள நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசுகள், கனிம வள நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தரப்பில் 8 நாட்களில் 86 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், அபய் எஸ் ஓகா, பிவி நாகரத்னா, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கர்நாடக சட்டப்பேரவையில் படுத்து தூங்கி பாஜக-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்! என்ன காரணம்? - MUDA Scam BJP JDS MLAs protest