வேலூர்: ராணிப்பேட்டை அருகே தாய் மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்களது குடும்பத்தாரிடம் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டிய எட்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அவர்களிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப் பணம், இரு கார்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கைதுசெய்த அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்திசாலை, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அல்தாப் தாசிப்(36), சப்ரின் பேகம்(32) தம்பதிக்கு அல்வினா மரியம்(3) என்ற மகள் உள்ளார். அல்தாப் தாசிப், செய்யாறில் தனியார் நிதிநிறுவனம் வாயிலாக தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு திட்டம், மளிகை சாமன்கள் வழங்கும் திட்டங்களை நடத்தி வந்தார்.
காரில் கடத்தப்பட்ட குடும்பம்:
ஆனால், இதன் வாயிலாக பல கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு நிலுவலையில் உள்ள நிலையில், நீதிமன்றப் பிணையில் வெளியே உள்ளார். இந்த நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், அவ்வப்போது அல்தாப் தாசிப் குடும்பத்தினருக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால், வசந்தகுமார் அவர்களை காரில் அழைத்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை (நவம்பர் 19) சப்ரின் பேகம், அவரது மகள் அல்வினா மரியம் ஆகிய இருவரை சென்னையில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு கார் மூலம் அழைத்துச் செல்வதற்காக வசந்தகுமார் வந்துள்ளார். இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற அவர், திடீரென போக வேண்டிய இடத்திற்கு செல்லாமல், வேலூர் நோக்கி காரை செலுத்தியுள்ளார்.
அங்கு அவருக்கு தெரிந்த நண்பர்களை வரவழைத்து, அவர்கள் உதவியுடன் இருவரையும் சிறைபிடித்துள்ளார். தொடர்ந்து சப்ரின் பேகத்தின் தாயார் ஹயாத்தின் பேகத்தை வாட்ஸ்ஆப் வாயிலாகத் தொடர்புகொண்டு, முதலில் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை கேட்டுள்ளனர். பின்னர் 50 லட்சம் பணம் தருமாறும், முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை உடனடியாக அனுப்புமாறும் நிர்பந்தித்துள்ளார்.
தனிப்படை அமைத்து விசாரணை:
இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறையிடம் ஹயாத்தின் பேகம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து தாய், மகளைக் கடத்தி சென்றவர்களிடம், பணம் தர தயாராக உள்ளதாகவும், அதனை ராணிப்பேட்டையில் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையின் ஆதரவுடன் ஹயாத்தின் பேகம் கூறியுள்ளார். இதனையடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, வந்த சிலரை தனிப்படை காவல்துறையினர் மோப்பமிட்டு பிடிக்கச் சென்றனர்.
இதையும் படிங்க |
கடத்தல்காரர்கள் கைது:
ஆனால், தங்களை காவல்துறையினர் பின் தொடர்வதை அறிந்துகொண்ட கடத்தல்காரர்கள், அங்கிருந்து அவர்கள் வந்த காரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை விடாமல் துரத்திய தனிப்படை காவல்துறையினர், கடத்தல்காரர்களைப் பிடித்ததோடு, தாய், மகளை பத்திரமாக மீட்டனர்.
பிடிபட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் வாலாஜாவை சேர்ந்த வசந்தகுமார் (31), ருத்ரேஷ்வரன்(30), காரையை சேர்ந்த பார்த்திபன் (35), ஏசுதாஸ் (30), சரத்குமார் (31), ராணிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி(34), சிப்காட்டைச் சேர்ந்த வினோத்(35), கோமதி(34) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் எட்டு பேரையும் கைதுசெய்த காவல்துறை, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப்பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டோ சுமோ, ஹுண்டாய் ஆகிய இரு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏன் கடத்தப்பட்டனர் என்பதற்கான காரணத்தையும் அறியவும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குழந்தையும், தாயும் கடத்தப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்ட காவல்துறையை அப்பகுதி மக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்