புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை மேற்கொண்ட விசாரணை விதத்தை, உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. கொலை குறித்து தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனைக்கு முன்னரே இயற்கைக்கு மாறான மரணம் என்று ரெக்கார்டில் குறிப்பிட்டிருந்தது என பல முரண்பாடுகளில் சிக்கியது கொல்கத்தா காவல்துறை.
இந்த நிலையில், பெண் மருத்துவர் வழக்கை குறித்து அவ்வப்போது சிபிஐ-யிடம் அறிக்கை கேட்டு வரும் உச்ச நீதிமன்றம், இளம் மருத்துவர்களின் போராட்டம் மற்றும் அவர்களது பாதுகாப்பு ரீதியாக மாநில அரசுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு விசாரணை வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தங்களிடம் தடயவியல் பரிசோதனை அறிக்கை உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் அரை நிர்வாணமாக இருந்ததாகவும், அவர் உடலில் காயங்கள் இருந்தது உண்மை எனவும் தெரிவித்தனர். மேலும், மாநில அதிகாரிகள் மாதிரிகளை எடுத்து மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். நாங்கள் அதனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளோம் என கூறினர்.
இதையும் படிங்க:இனி காவலில் இருந்தாலும் முன் ஜாமீன் கிடைக்கும்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அப்போது நீதிபதிகள், பெண் மருத்துவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று எப்போது பதிவு செய்யப்பட்டது என்று மாநில அரசிடம் விளக்கம் கேட்டனர். அப்போது, அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இறப்பு சான்றிதழில் மதியம் 1.47 மணி எனவும் இயற்கைக்கு மாறான இறப்பு என்று மதியம் 2.55 மணிக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக, நீதிபதிகள் அமர்வு முன்பு மாநில சுகாதாரத் துறை தாக்கல் செய்த நிலை அறிக்கையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 23 நோயாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், ''இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவர்களது பணியை வழிநடத்த நாங்கள் விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பது முக்கியம். எனவே, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் (செவ்வாய் கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
மேலும், பணிக்கு திரும்பும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மாநில அரசு எடுக்க கூடாது. ஒருவேளை மருத்துவர்கள் இதனை மீறும் பட்சத்தில், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது. மேலும், உடற்கூராய்விற்காக பெறப்படும் செல்லான் மிக முக்கியம். பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கும்போது செல்லான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதில்தான், கடைசியாக பெண் மருத்துவர் எந்த ஆடையை உடுத்திருந்தார் உட்பட்ட தகவல்கள் இருந்திருக்கும். அதை நீதிமன்றம் பார்க்க விரும்புகிறது. ஒருவேளை செல்லான் இல்லை என்றால், மேற்கு வங்க அரசு அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கின் புதிய நிலை அறிக்கையை அடுத்த வாரத்துக்குள் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்