லண்டன் : பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டல், பிரிட்டன் அரசின் உயரிய விருதை பெறப் போகும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் - இந்தியா இடையிலான வர்த்தக உறவிற்காக சுனில் பாரதி மிட்டலின் சேவையை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டன் அமைச்சக அலுவலகம் வெளியிட்டு உள்ள மதிப்புமிக்க பிரிட்டன் விருதுகளின் பட்டியலில், சுனில் பாரதி மிட்டலுக்கு பிரிட்டன் அரசரின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் கையில் சுனில் பாரதி மிட்டல் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்பட்டு உள்ளது.
66 வயதான தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல், இங்ஜிலாந்து மன்னர் சார்லசின் கவுரமிக்க அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதை பெருமையாக கருதுவதாக தெரிவித்து உள்ளார். ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இங்கிலாந்து அரசால் மதிப்புமிக்க விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை பெறுபவர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் "சர்" பட்டம் இணைத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு ரத்தன் டாடா, 2001ஆம் ஆண்டு ரவி சங்கர், 1997 ஆம் ஆண்டு ஜம்ஷத் இரானி ஆகியோர் மறைந்த எலிசபத் ராணியால் இந்த விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய - இங்கிலாந்து இடையிலான விண்வெளி வர்த்தகத்தை விரிவடைய செயததற்கும், செயற்கைகோள் துறையில் இரு நாடுகளை முன்னோடி நாடாக மாற்ற உழைத்ததற்காகவும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனில் பார்தி மிட்டலின் ஒன்வெப் நிறுவனத்தின் மூலம், உலகளவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க இங்கிலாந்து அரசு மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் கூட்டமைப்பை வழிநடத்தி வருகிறார்.
இந்தியா- பிரிட்டன் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் உறுப்பினராகவுன், இங்கிலாந்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளார். மேலும் நியூ கேஸில் பல்கலைக்கழகத்தின் சிவில் சட்டத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தையும், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவ சட்ட டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆலோசகர் வட்டத்தின் உறுப்பினராகவும் சுனில் பாரதி மிட்டல் உள்ளார். கூடுதலாக, சுனில் பார்தி மிட்டல் லண்டன் பிசினஸ் ஸ்கூலின் உறுப்பினர் குழுவிலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் இந்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், சுனில் பாரதி மிட்டலின் ஏர்டெல் ஆப்பிரிக்கா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்"? - பாஜக குற்றச்சாட்டு என்ன? தடயவியல் சோதனை!