தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா அபார வெற்றி! மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது! - Sikkim Assembly Election result2024 - SIKKIM ASSEMBLY ELECTION RESULT2024

சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் ஆளும் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

Etv Bharat
Sikkim CM Prem Singh Tamang (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 4:27 PM IST

டெல்லி: 18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து சிக்கிம், அருணாசல பிரதேசம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

இதில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 2ஆம் தேதியுடன் ஆளும் அரசின் பதவிக் காலம் நிறைவு பெறுவதால் அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் இன்று (ஜூன்.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி 31 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

காலை முதலே வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வந்த அக்கட்சியின் வேட்பாளர்கள், அதிரடி வெற்றிகளை குவித்து உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக கட்சி வெறும் 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை தழுவியது.

வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சியின் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகரில் கட்சி அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தேர்தல் வெற்றியை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இந்த வரலாறு காணாத வெற்றியின் மூலம் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து கட்சித் தொண்டர்கள், பொது மக்களுக்கு முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:அருணாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சி தக்கவைப்பு! சிக்கிமில் எஸ்கேஎம் கட்சி அபார வெற்றி! - Arunachal Sikkim Election Result

ABOUT THE AUTHOR

...view details