தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துணை முதல்வராகும் ஏக்நாத் ஷிண்டே..? உற்று நோக்கும் சிவசேனா எம்எல்ஏக்கள்..! - EKNATH SHINDE

மகாராஷ்டிராவின் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்க உள்ளனர் என்று சிவசேனா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் (கோப்புப்படம்)
ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 4:06 PM IST

Updated : Dec 5, 2024, 4:15 PM IST

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவை துணை முதல்வர் பதவி ஏற்குமாறு சிவசேனா எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், பாஜக தலைமை கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பார் என சிவசேனா மூத்த தலைவர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முன்னதாக மகாராஷ்டிராவுக்கு யார் முதல்வர் என்ற சர்ச்சை கிளம்பியது. சிவசேனா தரப்பினர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பாஜக, அதன் கட்சி சார்பில் முன்னாள் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவுக்கு புதிய முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக வேண்டும் என சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர். மாநிலத்துக்கு முதல்வராக இருந்தவர் தற்போது துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று தேர்தல் முடிவுக்கு பின்னர் கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் ஆக வேண்டும் என்றும் டெல்லி பாஜக அதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

இதையும் படிங்க:துணை முதலமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் வரை...தேவேந்திர பட்நாவிஸின் அரசியல் பயணம்!

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தீபக் கேசர்கர், '' சிவசேனாவின் அனைத்து எம்எல்ஏக்களும் நேற்று மாலை ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து, மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம் பெற்று, துணை முதல்வர் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்த நிலைப்பாட்டை ஷிண்டே சாதகமாக பரிசீலிப்பார் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் இது குறித்து செய்தி அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தீபக் கேசர்கர், '' பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை ஷிண்டே கட்டாயம் கேட்பார். அதனால் அங்கிருந்து ஒரு செய்தி வந்தால், அது மிகவும் நன்றாக இருக்கும், அவர்களின் முடிவை அவர் எப்போதும் பரிசீலிப்பார் என்றார்.

மேலும், '' பாஜகவின் தலைமை வற்புறுத்தியதை அடுத்து 2022ல் மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் கூட ஏற்றுக்கொண்டார். பாஜக-சிவசேனா வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், இரு கட்சிகளின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஒன்றுதான். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு முன்பாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏக்நாத் ஷிண்டே கேட்டு அவர் துணை முதல்வராக பதவியேற்பார் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவரை சமாதானப்படுத்தி பதவியேற்புக்கு தயார் செய்வோம்" என்று சிவசேனாவினர் கூறுகின்றனர்.

சிவசேனா வட்டாரங்களின்படி, மகாராஷ்டிராவின் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்க உள்ளனர் என்றும் முதல்வர் பதவியேற்பின் போதே இருவரும் துணை முதல்வராவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 5, 2024, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details