ஜெகனாபாத்: பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபா சித்தநாத் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜலாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண நேற்றிரவு ஏராளமான சிவ பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை என்பதால் இன்று அதிகாலை கவுகாட் வழியாக பாபா சித்நாத்தை தரிசனம் செய்வதற்காக கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியை கூட்டம் கூட்டமாக மக்கள் நெருங்கினர்.
அப்போது பக்தர்களுக்கிடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்குமிங்குமாக ஓட தொடங்கினர். இந்த நெரிசலில் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இறந்தவர்களில் நான்கு பேர் கயா மாவட்டத்தில் உள்ள மோர் டெக்ரியைச் சேர்ந்த பூனம் தேவி, மக்தும்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள லடோவா கிராமத்தைச் சேர்ந்த நிஷா குமாரி, ஜல் பிகாவில் உள்ள நாடோலைச் சேர்ந்த சுசீலா தேவி மற்றும் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எர்கி கிராமத்தைச் சேர்ந்த நிஷா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.