டெல்லி:இந்திய அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விவரத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டத்தை திருத்தி, தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை பாஜக அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் மூலம், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர், நிறுவனங்கள் வங்கியில் இருந்து எத்தனை தேர்தல் பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
நன்கொடை அளித்தவரின் பெயர் மற்றும் முகவரி அதில் இடம்பெறாது. அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. தேர்தல் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.2ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இவ்வழக்கிற்கான தீர்ப்பு இன்று (பிப்.15) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் இன்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு மத்திய அரசிற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. இவ்வழக்கில், தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்பின் 19 (1) (A) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும்.