மும்பை:97 புள்ளி 87 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியின் படி 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் அதேநேரம் கடந்த ஜூன் 28ஆம் தேதியின் படி 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாமல் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை ஏறத்தாழ 97 புள்ளி 87 சதவீத நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.