தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கடின உழைப்பு வீணாகாது; உறுதியான சிப்பாயாக செயல்படுங்கள்" - ஊழியர்களுக்கு ராமோஜி ராவ் எழுதிய 'பொறுப்பு உயில்' - RAMOJI RAO - RAMOJI RAO

Ramoji Rao: ராமோஜி குழும நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கான 'பொறுப்பு உயில்' ஒன்றை தன்னுடைய காலத்திலேயே ராமோஜி ராவ் அவர்கள் எழுதியுள்ளார்.

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ் (Credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 9:36 PM IST

ஹைதராபாத்: ராமோஜி குழு நிறுவனரும், மூத்த பத்திரிகையாளருமான ராமோஜி ராவ் கடந்த 8-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து உலகமே உற்று நோக்கும் வகையில் 'ராமோஜி பிலிம் சிட்டி' என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதோடு, ஈநாடு, ஈடிவி, ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடந்தி வந்தார்.

கலையுலக வித்தகராக இருந்த ராமோஜி ராவ் தனது சொந்த குழந்தைகளை விட அதிகமாக நேசிக்கும் தனது குழும நிறுவனங்களின் ஊழியர்களுக்காக பொறுப்பு உயில் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "ஒவ்வொரு ஊழியரும் தகுதியான கடமை உணர்வு கொண்ட படைவீரனைப் போன்று செயல்பட வேண்டும். சோதனைகளை உங்களின் படைப்பாற்றல் மூலம் தாண்டி வர வேண்டும். காலங்கடந்து நிலைத்திருக்கும் வகையில் நான் அமைத்துள்ள நிறுவனம் மற்றும் அமைப்புகளின் அடித்தளம் நீங்கள் தான்.

என்னுடைய வானில் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ரவீந்திரநாத் தாகூர் சொல்கிறார்,”இந்த மேகங்கள் மழைக்காக அல்ல, புயலுக்காக அல்ல- மாறாக என் மாலை வானை வண்ணமயமாக்குவதற்காக”. பல பத்து ஆண்டுகளாக, ஓய்வற்ற பணியாளனாக ஓடியுள்ளேன், பத்தாண்டுகளை தாண்டிச் செல்வதை உணராமல் கடந்துள்ளேன். ஒவ்வொரு விடியலும் சூரியனின் முதல் ஒளிக்கற்றையைப் போன்று கவனக்குவிப்பை என்னுள் ஏற்படுத்துகின்றன. அந்த ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியனின் தாக்கத்தால், என்னுடைய தனித்திறன் மற்றும் படைப்பாக்கம் கிடைக்கப் பெறுகிறது. தற்போது விஸ்வகவியான ரவீந்திரநாத் தாகூரின் மேற்கண்ட வார்த்தைகள் என் எண்ணத்தை நிரப்புகின்றன.

எனக்கு வயதானாலும் புத்தம்புது யோசனைகள் என்னுள் ஊற்றெடுக்கின்றன. அவை ‘மாற்றம் ஒன்றே அழிவில்லாதது… மாற்றமே உண்மை’ என உரக்கச் சொல்கின்றன. ராமோஜி குழும குடும்பத்தின் தலைவராக உங்கள் அனைவருக்கும் இந்த கடிதத்தை எழுத ஊக்கம் பெற்றுள்ளேன். ஏனெனில், இந்த கடித்ததின் பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எப்போது, எங்கு என தெரியாது, இது எதிர்காலத்திற்கான திட்டமிடல். ராமோஜி குழுமத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உங்களின் சிறந்த லட்சியங்களுக்காக எனது வாழ்த்துக்களுடன் கூடிய மடல் இது.

மனிதன் என்பதன் பன்மைப் பதம் பலம் என்பதாகும். ராமோஜி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் எனது யோசனைகளிலிருந்து பிறந்தவை என்றாலும், அனைத்தும் சக்திமிக்க அமைப்புகளாக மில்லியன் கணக்கான மக்களால் விரும்பப்படுபவையாக மாறியுள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நேரடியாக பங்களிப்பைக் கொண்டிருக்கும் பல ஊழியர்களை நான் அறிவேன். அவர்கள் தொழில்முறை மதிப்புகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு குடும்பத்தில் ஒருவராக இயங்குபவர்கள்.

ராமோஜி குழுமத்தில் பணியாற்றுவது என்பது மதிப்புக்குரியது. நிறுவனத்தின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் ஊழியர்களைக் கொண்டுள்ளதில் நான் பெருமை அடைகிறேன். ‘கடுமையான உழைப்பால் சாதிக்க இயலாதது எதுவுமே இல்லை’ - இது தான் தொழிலின் அடிப்படை கொள்கையாக பல பத்தாண்டுகளாக நான் பின்பற்றி வருகிறேன்! என்னுடைய அனைத்து நிறுவனங்களும் மக்கள் நலனையே குறிக்கோளாக கொண்டிருப்பதால், மனித வளங்களை முறையாக பயன்படுத்துவதோடு, உயர் மதிப்பு, பணிகளுக்கான தர நிர்ணயங்களை மகுடமாக சூடிக் கொண்டுள்ளன. எனக்கு உறுதுணையாக தசாப்தங்களாக நின்று என்னுடைய குறிக்கோள்கைளை அடைய உதவும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய சிறந்த குணமாக வாழ்வில் நான் பார்ப்பது என்னவென்றால், எந்த வேலை அல்லது திட்டத்தை நான் கையிலெடுத்தாலும், அது தனித்தன்மையுடன் முதன்மையான இடத்தைப் பிடிப்பதாக இருக்க வேண்டும். அந்த நோக்குடன், மார்கதர்சி முதல் ஈடிவி பாரத் வரை தொடக்கி வைத்து ஒளியேற்றியிருக்கிறேன், தெலுங்கு இனம் உயர்ந்து நிற்பதை இது உறுதி செய்யும்.

என்னுடைய ஆசையெல்லாம், நான் கட்டமைத்துள்ள நிறுவனங்களும், அமைப்பும் எந்நாளும் நிலைத்திருக்க வேண்டும் என்பது தான். ராமோஜி குரூப் ஆஃப் கம்பெனீஸ்-ன் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகத்தான் வலிமையான நிர்வாகத்தையும், அமைப்பையும் தயார் செய்துள்ளேன், இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான மக்களின் நேரடி வேலை வாய்ப்பாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்களின் மறைமுக வாழ்வாதாரமாகவும் உள்ளது. எனக்குப் பிறகாகவும், நீங்கள் அனைவரும் உங்கள் கடமையில் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் நமது பெருமை மிகுந்த பாரம்பரியம் எப்போதுமே தொடர்வதோடு, ராமோஜி நிறுவனங்களின் மதிப்பு செழுமையடையும்.

தகவல், அறிவியல் , பொழுதுபோக்கு, வளர்ச்சி (Information, Science, Entertainment, Development) - இவைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் ஒளி பாய்ச்சக் கூடிய முக்கிய அம்சங்கள். ராமோஜி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் இந்த நான்கு தூண்களில் தான் நின்று தொடர்ச்சியான பொதுச்சேவையாற்றியில் பங்காற்றி வருகின்றன. என்றும் மாறாத பொதுமக்களின் நம்பிக்கை நமக்கு பலமாக இருக்கிறது.

துணிச்சலான இதழியலில் ‘ஈநாடு’வின் வெற்றிகரமான பயணம்; ‘உஷோதயா’ மற்றும் இதர பதிப்புகளின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. மாநில எல்லைகளைக் கடந்து பரவியிருக்கும் ‘மார்கதர்சி’ கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு பொன் போன்றது.

நம்முடைய வலிமை என்பது நாடு முழுவதும் புகுந்திருக்கும் 'ஈடிவி' மற்றும் 'ஈடிவி பாரத்' நெட்வொர்க்குகள். தெலுங்கு சுவையின் தூதுவராக விளங்கும் 'பிரியா' தயாரிப்புகள். தேசத்தின் பெருமையாகத் திகழும் ராமோஜி ஃப்லிம் சிட்டி.

இவை அனைத்தோடு எனது வெற்றிகளின் போது ராணுவமாக இருக்கும் ஊழியர்களான நீங்கள் தான். ‘ராமோஜி’ என்பது ஒழுக்கத்தின் மறுபெயர்!. இப்போது உங்களின் வேலை நிறுவனத்தின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்தது. வேலையில் வளருங்கள், உங்கள் வாழ்விலும் வளருங்கள். சவால்களை படைப்பாற்றல் சக்தியுடன் எதிர்கொள்ளுங்கள். ராமோஜி குழுமத்தின் திக்கு விஜய பயணம் தடை செய்ய முடியாதது. ஒவ்வொரு ஊழியரும் தகுதி வாய்ந்த உறுதி கொண்ட வீரராக நகர வேண்டும்.

ராமோஜி குழும நிறுவனங்கள் என்பவை அசைக்க முடியாத நம்பிக்கையின் முகவரி. பொறுப்புணர்வு என்ற உயிலை உங்களுக்காக எழுதுகிறேன், கடமையை தலையாயதாகக் கொள்ளும் ஆணையை உங்களுக்கு வழங்குகிறேன்!

இவ்வாறு உணர்வுப் பூர்வான செய்தியை தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:ஊடக சக்கரவர்த்தி ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்! சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி! - Ramoji Rao Funeral

ABOUT THE AUTHOR

...view details