ஜலந்தர்: என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்த ஸ்கிராப் டீலருக்கு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று செய்தித்தாளை எடுத்து பார்த்தபோது இன்ப அதிர்ச்சி. தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு அடித்திருப்பதை கண்டு வியப்பின் உச்சிக்கே போனார் 67 வயதான ஸ்கிராப் டீலர்.. தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் அந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரீதம் லால் ஜக்கி (67). இவருக்கு அனிதா ஜக்கி என்ற மனைவி உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜலந்தரில் ஸ்கிராப் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். ஆனால், அதன் மூலம் வரும் வருமானம் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சரியாக இருந்தது. இதனால், கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கம் இவருக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று லால் ஜக்கியை காண அவரது நண்பர் சேவக் என்பவர் வந்துள்ளார். அப்போது லால் ஜக்கி நண்பனிடம் 500 கொடுத்து, தனது மனைவி பெயரில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். வழக்கம்போல லாட்டரி சீட்டை வாங்கிவிட்டு தனது அன்றாட வேலைகளை கவனித்து வந்தார் லால் ஜக்கி.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்டரி பரிசு தொடர்பான செய்தியை தெரிந்துகொள்ள செய்தித்தாளை பார்த்த லால் ஜக்கி, தனது மனைவி பெயரில் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இருப்பினும், அந்த செய்தி உண்மைதானா? தான் வைத்திருந்த லாட்டரி சீட்டு எண்ணிற்குத்தான் பரிசு விழுந்துருக்கா என்று குழப்பமும் லால் ஜாக்கிக்கு எழுந்தது.