சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் - ஹரியான எல்லையில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிசான் அந்தோலனுடன் தொடர்புடைய அமைப்புகளின் தலைமை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க, ஹரியானா போலீசார் முடிவு செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பாலா போலீசார் கூறியதாவது, "கடந்த பிப்.13ஆம் தேதி முதல் விவசாயிகளின் ’டெல்லி சலோ' அணிவகுப்பு தொடர்பாக, சம்பு பகுதியில் உள்ள தடுப்புகளை உடைக்க விவசாய அமைப்புகள் முயற்சி செய்கின்றனர். மேலும், போலீசார் மீது கற்களை வீசி கலவரத்தை உருவாக்குவதன் மூலம், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கள் சேதமடைந்தன. 30க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 2 போலீசார் உயிரிழந்தனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பல விவசாயத் தலைவர்கள் இதில் செயல்படுகின்றனர்" என்று கூறினார்.