தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்" - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி - parliamentary election 2024

EX CM Narayanasamy: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனப் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

EX CM Narayanasamy
புதுச்சேரி மாஜி முதலமைச்சர் நாராயணசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 10:18 PM IST

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்திகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைச் சரி செய்ய வேண்டும். காரைக்காலில் சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் ஜிப்மர் திறந்தால் மட்டும் போதாது, தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஜிப்மருக்குக் காங்கிரஸ் ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் மேரிகட்டடம், கடற்கரையில் பல்நோக்கு அரங்கம், காமராஜர் மணிமண்டபம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. மேரிகட்டடம் பிரதமரால் திறக்கப்பட்டு மூன்றரை ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரை பல்நோக்கு அரங்கம் 2 ஆண்டாக மூடிக்கிடக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காமராஜர் மணி மண்டபம் அரசு விழாக்கள் நடத்த மட்டுமே பயன்படுத்துகிறது.

நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி புதிதாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தொழிற்சாலைகளைத் திறக்கவில்லை, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதுதான் ஆட்சியாளர்களின் சாதனை.

புதிய சட்டமன்றம் கட்டும் விவகாரத்தில் ஆளுநர், சபாநாயகர் இடையே பணிப்போர் நடக்கிறது. சபாநாயகர் எந்த உள்நோக்கத்தோடு ரூ.620 கோடியில் சட்டமன்றம் கட்ட நினைக்கிறார்?. இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் உடந்தையாக உள்ளனர். ஆளுநரிடம் உள்ள கோப்புப் பரிமாற்றம் பற்றி சபாநாயகர் வெளியே பேசுவதே தவறு. இந்த ஆட்சியில் ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இவர்களால் சட்டமன்றம் கட்ட முடியாது.

இதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காது. நிர்வாகரீதியிலான ஆளுநர், சபாநாயகர் சண்டை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை முதலமைச்சர் வேடிக்கை பார்க்கிறார். புதுச்சேரி போதை நகரமாகிவிட்டது. கஞ்சா ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை வில்லியனூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்கப்படுகிறது. புதுச்சேரி காவல்துறை என்ன செய்கிறது?

புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. புதுச்சேரி மக்களின் நிம்மதியான வாழ்க்கை சுற்றுலாப் பயணிகள் வருகையால் கெட்டு வருகிறது. அபின், பிரவுன்சுகர் உட்ப போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காவல்துறை ரெஸ்டோபார் உரிமையாளர்களிடம் கையூட்டு பெறுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரியைக் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரிக்கை வைத்து வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்குத் தொகுதியைத் தாரைவார்த்துள்ளது. 3 நியமன எம்எல்ஏ, மாநிலங்களவை பதவியை பாஜக பறித்துக் கொண்டது. ரங்கசாமி தன் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, ஆட்சியின் ஊழல்களை மத்திய பாஜக ஆட்சி கண்டுகொள்ளாமல் இருக்க, பதவிகளை பாஜகவுக்குக் கொடுத்து வருகிறார். பாஜக வேட்பாளர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது.

புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பாஜக பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதைப் பார்த்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் அரியபெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவார். காங்கிரஸில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும்.

நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் எனக் கட்சித்தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ராகுல்காந்தி, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா? என நிருபர்களிடம் கேட்டபோது, அவர் அகில இந்தியத் தலைவர், எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா?. ஏன் தமிழிசை தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டியதுதானே? என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: விவசாயிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details