டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செப்டம்பரில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாட்களுக்கு செல்ல உள்ளார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதன் காரணமாக, பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் புருனேவுக்குச் செல்கிறார். சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடியின் இந்த பயணம், இரு நாட்டின் உறவை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்திய பிரதமர் அரசு முறை பயணமாக புருனேவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
புருனேவுக்கும், இந்தியாவுக்குமான உறவானது பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் புதிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்வது உட்பட தற்போதுள்ள அனைத்து துறைகளிலும் பின்னிப் பிணைந்துள்ளது.
அதேபோல், புருனேவை தொடர்ந்து பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். இந்த சந்திப்பில், இந்தியா - சிங்கப்பூர் இடையேயான பல்வேறு துறை ரீதியான கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். பிரதமர் மோடியின் இந்த இருதரப்பு சந்திப்பானது இரு நாடுகளுக்குள்ளான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் எஸ்சிஓ மாநாடு: வந்து சேர்ந்த அழைப்பு.. செல்வாரா பிரதமர் மோடி..?