டெல்லி:நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
என் அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நாட்டுப்பற்றாலும், வீரத்தாலும் உந்தப்பட்ட தேசப்பற்றாளர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகத்தைப் புரிந்தார்கள். தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும், அவற்றின் பலவகை வெளிப்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.
அவருடன் கூடவே சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் போஸ், பாபா சாகேப் அம்பேத்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற பல்வேறு மகத்தான மக்கள்நாயகர்களும் கூட ஆக்கப்பூர்வமாகப் பங்களித்தார்கள். தேசம் தழுவிய இப்போராட்டத்தில் அனைத்து சமூகங்களும் பங்கெடுத்தன. பழங்குடிகளில் தில்கா மாஞ்ஜி, பிர்ஸா முண்டா, லக்ஷ்மண் நாயக், ஃபூலோ-ஜானோ போன்ற இன்னும் பலரின் உயிர்த்தியாகம், இன்று பெருமளவில் போற்றப்பட்டு வருகிறது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சொற்களை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். "நாம் நமது அரசியல் மக்களாட்சியை சமூக மக்களாட்சியாக ஆக்க வேண்டும். சமூக மக்களாட்சி ஆதாரமாக இல்லாதவரை, அரசியல் மக்களாட்சியால் நிலைத்திருக்க முடியாது" என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
சமூகநீதி என்பது அரசின் முதன்மை நோக்கமாகும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தின் பிற மக்களின் நலனுக்காக இதுவரை இல்லாத பல முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு நமது தேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 97 கோடி. இதுவே கூட ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிலை. பாரதம் வாயிலாக இந்த வெற்றிகரமான தேர்தல் நடத்தப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த உலகின் ஜனநாயகச் சக்திகளுக்கும் பலத்தை அளிக்கிறது.