டெல்லி:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவு நாளை வெளியாகவுள்ளது. வெற்றி வாகை சூடப்போவது பாஜக கூட்டணியா? அல்லது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு(Exit Polls) முடிவுகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என வெளியிட்டுள்ளது. ஆனால், அதனை ஏற்க மறுத்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை கூறி வருவதோடு கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர்களின் இல்லங்களில் தயாரிக்கப்பட்டது போல் உள்ளதாக பதிலடி கொடுத்துள்ளனர்.
வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்: அப்படி கருத்து கணிப்புகள் தொடர்பாக பல தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான காங்கிரஸ், தேர்தல் வெற்றியை கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் வெற்றி விழா ஏற்பாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019-ல் நடந்த தேர்தலை காட்டிலும் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் தலைவர்கள் ஏற்கனவே கூறி வரும் நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் தலைமை அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன? : 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்போது உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகளின் கள ஆய்வுப்படி மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அதனை வெளிப்பாட்டை மக்கள் தங்களது வாக்குகள் வாயிலாக செலுத்தியிருப்பார்கள் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சோனியா காந்தி உறுதி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதனை நாளை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்" என உறுதிபட தெரிவித்தார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் தலைவர்களுக்கும் மேலும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை:கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடந்த 'இந்தியா கூட்டணி' கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்" என நம்பிக்கையுடன் கூறினார்.
இதையும் படிங்க:கருணாநிதி பிறந்தநாள்; சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை! - Karunanidhi Birthday