புவனேஸ்வர்:வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, போரை விடவும் அமைதியை முன்னெடுப்பதாக இந்தியா உள்ளது. 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "புத்தரின் அமைதிவாத சிந்தாந்தத்தை பற்றி பேசினார். சர்வதேச அளவில் அமைதியை உருவாக்கும் நாடாக இந்தியாவின் பங்கை விரிவாக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இதயங்களில் இந்தியா துடிக்கிறது:இந்த நிகழ்வில் மேலும் பேசிய பிரதமர் மோடி, "வலுவான பாரம்பரியத்தின் காரணமாக, எதிர்காலம் போரில் அல்ல, ஆனால் புத்தரின் அமைதியில் உள்ளது என்பதை இந்தியா உலகத்திடம் சொல்ல முடியும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனரோ அந்தந்த நாடுகளின் இந்திய தூதர்களாக உள்ளனர் என எப்போதுமே நான் கருதுகின்றேன். இந்தியாவில் விழா காலங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வந்திருப்பது என்பது இந்தியாவுடன் நெருக்கமான ஒரு பிணைப்பை அளிக்கும் வாய்ப்பை தருகிறது. அவர்களின் மதிப்பீடு முறைகள் உலகத்துடன் தடையின்றி ஒருங்கிணைப்பதாக உள்ளது. அதே போல இந்தியாவின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் உள்ளது.
வெளிநாடுகளில் சந்திக்கும் போது உங்களுடைய அன்பு மற்றும் ஆசிர்வாதத்தை என்னால் மறக்க இயலாது. அவை என்னுடன் தொடர்ந்து இருக்கின்றன. உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களை உலகத் தலைவர்கள் எப்போதுமே வாழ்த்துவதால் இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். சமூகத்துடன் இணைந்திருத்தல், விதிகள், பாரம்பரியத்துக்கு மதிப்பளித்தல், வெளிநாடுகளில் கவுரவமாக பணியாற்றுதல், அந்தந்த நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பணியாற்றுதல் என இருந்தபோதிலும் இன்னும் அவர்களின் இதயங்களில் இந்தியா துடித்துக் கொண்டிருக்கிறது.