ஹல்த்வானி: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம், ஹல்த்வானி பகுதியில் உள்ள பன்புல்புரா காவல் நிலையம் அருகே சட்ட விரோதாமாக கட்டப்பட்ட மதரஸா கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தை இடிப்பதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத கட்டடம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல எதிர்ப்புகள் வெடித்தன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, இந்த மதரஸா கட்டடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வாசிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதில், போராட்டகாரர்கள் அதிகாரிகள் மீது கற்கள் வீசியும், சில வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டம் நடத்தினர்.
இதை சமாளிக்க முடியாமல் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தெரிவிக்கப்பட்டது.