காசிரங்கா (அசாம்):2 நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 4 மணியளவில், சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு, அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்க தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றார்.
பின்னர், அங்குள்ள வனவிலங்குகளை பார்வையிட்டு யானை சவாரி செய்தார். இதனைத் தொடர்ந்து ஜீப் சவாரி செய்த அவர், பூங்காவின் இயற்கை அழகை ரசித்தார். பயணத்தின்போது பிரதமர் மோடி சில இயற்கைக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர், "இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமை போர்வைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமானது, கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உள்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அதன் இயற்கைக் காட்சிகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். காசிரங்கா பூங்கா உங்களை அசாமின் இதயத்துடன் ஆழமாக இணைக்கும் இடமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.