டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று (ஜூன்) கூடியது. முன்னதாக தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு விழா நடந்தது. தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிதமர் மோடி முதல் ஆளாக வந்த பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோருக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், கிரன் ரிஜிஜூ, நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றுக் கொண்ட போது நீட் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக மக்களவை கூட்டத் தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று பெருமைக்குரிய நாள், சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாண விழா நடைபெறுகிறது. முன்னர் பதவிப் பிரமாணம் பழைய நாடாளுமன்றத்தில் நடந்தது.