புதுடெல்லி:கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து கோவிலில் இந்திய தூரகத்தின் சார்பில் இந்தியர்களுக்கு வாழ்நாள் சான்று வழங்கும் முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது அந்த கோவிலுக்கு கொடிகளுடன் வந்த காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்து கோவிலில் இருந்த இந்தியர்களுக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. காலிஸ்தான் அமைப்பினர் கோவில் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கனடாவில் இந்து ஆலயம் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோல நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,"என்று தெரிவித்துள்ளார்.