டெல்லி:குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர், மக்களவை தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது என்ற தவறான தகவலை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தலைமையிலான கூட்டணி கட்சி ஜனநாயகத்தை அழிக்க துடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க திட்டமிட்டுள்ளதாக மக்களிடம் கூறியதாகவும் அதன் காரணமாக 234 இடங்களில் எதிர்க்கட்சிகளை வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டி உள்ளதாக கூறினார்.
பல் இல்லாத பாம்பைப் போல, கொம்பு இல்லாத மாட்டை போல வலுவில்லாத பாஜக அவையில் அமர்ந்துள்ளதாக கூறினார். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை கலைக்க வேண்டும் என்றும் நீட் தேர்வை தேசிய அளவில் முழுமையாக நீக்க வேண்டும் என்றார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு சட்டமன்றம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதுவரை அதுகுறித்து பொருட்படுத்தவில்லை என்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் செயல் இது என்றும் திருமாவளவன் கூறினார். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 47ல் நாடு முழுவதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.