தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி ஆய்வு - MYSURU DARBHANGA BAGMATI EXPRESS

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார்.

தடம் புரண்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் பெட்டிகள்
தடம் புரண்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் (Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2024, 7:27 AM IST

Updated : Oct 12, 2024, 9:00 AM IST

திருவள்ளூர்:பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார்.

மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண். 12578 ) பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு (சென்னையிலிருந்து 46 கி.மீ.) இடையே செல்லும்போது அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. மோதிய வேகத்தில் இன்ஜின் அருகே இருந்த பவர் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் மொத்தம் 12-13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள பொதுமக்கள் ரயில்வே ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். (Etv Bharat Tamil Nadu)

இந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங், சென்னை கோட்டை மேலாளர் விஸ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். விபத்திற்கு காரணம் மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி ஆய்வு (Etv Bharat Tamilnadu)

இதற்கிடையே, தெற்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், அனந்த் மதுகர் சௌத்ரி விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொள்ளும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்போதைக்கு விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றேன்.

ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பேன். விபத்து நடந்த இடத்தின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்வேன். ஆவணங்கள், ஆய்வின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இதன் பின்னரே எதனால் விபத்து நடந்தது என்ற முடிவுக்கு வரமுடியும். அதுவரையிலும் இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பதை சொல்ல இயலாது.

சிக்னல் கோளாறா என்பது குறித்து எல்லாம் இப்போதைக்கு சொல்ல இயலாது. விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. பயணிகள் சிலர் காயம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் ஆய்வு முடித்த பின்னர் காயம் அடைந்த பயணிகளை சந்தித்தும் பேச உள்ளேன்,"என்று கூறினார்.

Last Updated : Oct 12, 2024, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details