கர்நாடகம்: தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தசரா பண்டிகை பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகிறது. தசரா என்றாலே கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு தனி இடம் உண்டு. தேவி பார்வதி சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தி மகிஷன் என்ற அரக்கனை அழித்தற்காக இவ்விழா எடுக்கப்படுகிறது. விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே இங்கு தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தசரா பண்டிகை ஆண்டுதோறும் கர்நாடக அரசின் சார்பில் அரசு விழாவாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். தசராவின் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகளும், கொண்டாட்டங்களும், கலை நிகழ்ச்சிகளும் மைசூரில் நடக்கும்.
விழாவின் கடைசி நாளான விஜய தசமி அன்று ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறும். அதன் பின் வான வேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பஞ்சின கவாயத்து என்ற தீப ஒளி அணிவகுப்புகள் நடைபெறும்.
அந்த வகையில் 414வது ஆண்டாக தசரா விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு எப்போதும் போல மைசூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டது. விழாவின் கடைசி நாளான நேற்று மைசூரு பாஜக எம்.பியும்.,மைசூரு மன்னருமான யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்திற்கு பூஜை செய்தார். அதன் பின் ஜம்பு சவாரி எனப்படும் யானை ஊர்வலம் நடைபெற்றது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி அம்மன், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.