சென்னை:இந்தியாவில் இஸ்ரோவின் 2 வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் அமையவிருக்கிறது. நாளை காலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டவுள்ளார். 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள இந்த ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலம் எடுப்புப் பணிகள் ஏறத்தாழ நடந்து முடிந்துள்ளன.
2வது ராக்கெட் ஏவுதளம் ஏன்? : ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கு முன்பே ஏவுதளத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் குலசேகரன்பட்டினமும் ஒன்று என்கிறார், இஸ்ரோ முன்னாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்தான் சிறந்த தேர்வு: அறிவியல் ரீதியாக துருவ வட்டப் பாதையில் தான் செயற்கைக் கோள்கள் அதிக அளவில் செலுத்தப்படுகின்றன. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரையில் உள்ளது, இதற்கு தெற்கே எந்த நிலப்பரப்பும் இல்லை. கடந்த 50 வருடங்களாகக் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து பூகோள ரீதியாகப் பார்த்தால், ஏவுகணைகளை அனுப்பும் போது தெற்கு திசையில் கடல் மட்டும் இருக்கும் இடம் குலசேகரன்பட்டினம் தான் என்பதை சுட்டிக்காட்டுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.
சமீபகாலமாக பல ஆயிரக்கணக்கில் குறைந்த எடை (250- 300 கி) உள்ள செயற்கை கோள்கள் தொலைத் தொடர்புக்கும், தொலையுணர்வுக்கும் அனுப்பப்படுகின்றன. 7, 8 ஆண்டுகளுக்குப் பின், அந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயை எட்டியுள்ளன. பொழுது, அந்த இடத்திற்கு உடனடியாக மாற்று செயற்கைக்கோளை அனுப்ப வேண்டிய அவசியம் உள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
தேவைக்கு ஏற்ப ஏவுவது வசதியாகும்: வழக்கமாக ஐம்பதிலிருந்து நூறு செயற்கைக்கோள்களை ஒரே பெரிய ஏவுகணையில் அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தோம். ஆனால் இதே நடைமுறையை பின்பற்றினால், செயலிழந்த செயற்கைக் கோள்களை உடனடியாக மாற்ற முடியாது. உதாரணத்திற்கு செல்போன் சேவை வழங்கும் ஒரு செயற்கைக் கோள் செயலிழந்து விட்டால் அதனை மட்டும் உடனே மாற்ற வேண்டும். கூடுதல் செயற்கைக் கோள்களின் வருகைக்காக காத்திருக்க முடியாது. அதே நேரத்தில் சிறிய செயற்கைக் கோளை பெரிய ராக்கெட்டுகள் மூலம் அனுப்பினால் செலவும் அதிகமாகும்.
சிக்கனமான எஸ்.எஸ்.எல்.வி.: உலகளவில் பி.எஸ்.எல்.வி (PSLV) ஏவுகணைதான் பொருட் செலவில் சிக்கனமானது. அதை விட சிக்கனமானது, நாம் கடைசியாக அனுப்பியுள்ள எஸ்.எஸ்.எல்.வி (SSLV). பி.எஸ்.எல்.வி-யின் விலை 120 கோடி என்றால், எஸ்.எஸ்.எல்.வி 30 கோடி தான். அதிலும், குலசேகரன்பட்டினத்தில் இருந்து அனுப்பினால் இரண்டு செயற்கை கோள்களை எஸ்.எஸ்.எல்.வி மூலம் அனுப்ப முடியும். ஆனால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து அனுப்ப அதிக திறன் தேவை என்பதால் ஒரு செயற்கைக்கோளைத்தான் அனுப்ப முடியும். குலசேகரன்பட்டினத்திலிருந்து அனுப்பும் அனைத்து செயற்கைக் கோள்களுமே எஸ்.எஸ்.எல்.வி. மூலமாகத்தான் அனுப்பப்பட உள்ளன.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் (Launch Pad) மட்டுமே உள்ளது. செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள் என மற்ற பாகங்கள் திருவனந்தபுரம், மகேந்திரகிரி, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வரவழைக்கப்ட்டு அசெம்பிள் செய்து ஏவுகணைகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் குலசேகரன்பட்டினத்தில் ஏவுகணை மட்டுமல்லாது, அதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும். நாளைக்கு ஒரு செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என இன்று திட்டமிட்டால் கூட , உடனடியாக விண்ணில் ஏவி நிலை நிறுத்த முடியும். அன்னிய முதலீடுகள் வருகின்றன, இவற்றை பயன்படுத்தி ஏவுதளம் மட்டுமல்லாது விண்வெளி கலன் உற்பத்தி பூங்காவும் (space manufacturing park) அங்கேயே அமைக்கப்பட உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இதே போன்ற உத்தியைத்தான் பின்பற்றுகிறார். ஆனால் அவருக்கு அமெரிக்காவில் குலசேகரன்பட்டினம் மாதிரியான ஏவுதளம் கிடைக்கவில்லை. குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையப்பெற்றால், அறிவியல் ரீதியைத் தாண்டி வர்த்தக ரீதியிலும் சிறப்பாக செயல்படலாம். 4 முதல் 5 வருடங்களில் தினம் ஒரு செயற்கைக்கோள் அல்லது வாரத்திற்கு இரண்டு மூன்று செயற்கைக்கோள் அனுப்பும் திறனை நாம் எட்டுவோம். இவை அத்தனையும் சாத்தியமாகும் பட்சத்தில் தமிழ்நாடு உலக விண்வெளி மையமாக மாறும் என மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவிக்கிறார்.
விண்வெளித்துறையில் முன்னேற்றம் காணாத நாடுகளுக்கு பயிற்சி மற்றும் செயற்கைக்கோள் கட்டுமானத்தில் உதவவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் விண்வெளி விவகாரங்கள் அமைப்பின் மூலம் உலக நாடுகளை இந்தியா அணுகி வருவதாகவும் மயில்சாமி அண்ணாதுறை குறிப்பிட்டார்.