டெல்லி:18வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடைக்கால் சபாநாயகராக சிறப்பாக பணியாற்றிய ஒடிசா பாஜக எம்பி பரத்ருஹரி மஹ்தாபுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்தார். மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் அமர வைத்தனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த 24ஆம் தேதி கூடியது. தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் லல்லான் சிங்ம் ஜித்தன் ராம் மஞ்சி, அமித் ஷா, சிராக் பஸ்வான், எச்டி குமாரசாமி, ராம் மோகன் நாயுடு ஆகியோரும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்தனர்.