மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ராட்சத இரும்பு பில் போர்டு ஒன்று திடீரென முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று இந்த கோர விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராட்சத இரும்பு பில் போர்டுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 60-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த விபத்தில் ராட்சத பில் போர்டுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 67 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களைக் கொண்டு ராட்சத பில் போர்டை அகற்றும் பணி நடைபெற்றது.