பெங்களூரு:கர்நாடகாவில், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா), முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் எம்பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்த போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் மூலம் இந்த வழக்கை, லோக் ஆயுக்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கையிலெடுத்துள்ளனர். முதல்வர் சித்தராமையா முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி பி.என். பார்வதி இரண்டாவது குற்றவாளியாகவும், இவர்கள் தவிர மேலும் இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த புதன்கிழமை, 'முடா' தொடர்பான வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்..பிரதமரிடம் முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள்!
சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு சுமார் 14 வீட்டுமனை இடங்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்தார். இதனை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 156 (3)-ன் கீழ், சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்த விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், விசாரணை அறிக்கையை வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் சிறப்பு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சித்தராமையாவின் மனைவி பி.என்.பார்வதிக்கு ஒதுக்கப்பட்ட மனையிடங்களானது, 'முடா' கையகப்படுத்திய நிலத்துடன் ஒப்பிடும்போது அதிக சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. பி.என்.பார்வதியிடமிருந்து பெறப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 50:50 விகிதத்தில் 'முடா' நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மைசூரு தாலுகாவின் கசாபா ஹோப்லியின் கசாரே கிராமத்தில் சர்வே எண் 464-ல் அமைந்துள்ள 3.16 ஏக்கர் நிலத்தில் பார்வதிக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்