ஸ்ரீநகர்:வெவ்வேறு அரசு துறைகளை சார்ந்த 900 ஊழியர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கை வட்டத்தில் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசின் பொது நிர்வாகத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட 900 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 351 வழக்குகள் இதுவரை முடிந்துவிட்டதாகவும், 468 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், 81 வழக்குகளை ஆணையம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 36 அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 2014 முதல் பல்வேறு காலகட்டத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற பிறகு தனது முதல் ஊடக உரையாடலில், அதிகாரிகளின் பொறுப்புணர்வை தனது அரசு உறுதி செய்யும் என்றும், முறைகேடுகள் செய்யும் அதிகாரிகளை கண்காணிக்க பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:பெங்களூருவில் மூவர் கொலை: சொந்த குடும்பத்தையே கொலை செய்த நபர் - காரணம் என்ன?
அந்த வகையில், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ஊழல் தடுப்புப் பணியகம் (ACB) இந்த முறைகேடுகளை கண்காணித்து வந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்களை விசாரணை வட்டத்துக்குள் கொண்டு வந்து இதனை உறுதி செய்துள்ளனர். பின்னர் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட 900 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் அடல் துலூ கூறுகையில், ''முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். இத்தகைய தண்டனைகள் மற்ற அரசு ஊழியர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். குற்றங்களை மீண்டும் செய்வதற்கு ஒரு தடுப்பாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஜம்முவில் ஊழலில் ஈடுபட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக, 18 அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களில், 5 பேர் பட்வாரி வருவாய் துறையில் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.