தமிழ்நாடு

tamil nadu

100 கி.மீ. தாண்டி கிடைத்த சடலங்கள்; கேரள நிலச்சரிவின் கோரத்தாண்டவம் - kerala landslide latest news

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 7:51 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரை பலி கொண்டுள்ளது. இவர்களில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் 100 கிலோமீட்டர் தாண்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

வயநாட்டில் நடைபெறும்  மீட்புப்பணிகள்
வயநாட்டில் நடைபெறும் மீட்புப்பணிகள் (Image Credit - ETV Bharat Tamilnadu)

ஹைதராபாத்:கடவுளின் தேசமாம் கேரளம் இன்று கண்ணீர் கடலில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சம் வயநாட்டின் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றிரவு வழக்கம்போல் உறங்க செல்லும்போது, இன்னும் சில மணி நேரங்களில் தாங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோம் என்றோ, உயிரோடு மண்ணில் புதைப்படுவோம் என்றோ சத்தியமாக நினைத்திருக்கமாட்டார்கள்.

ஆனால், யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திராத பெருந்துயரம் வயநாட்டில் நிகழ்ந்துள்ளது. கனமழையின் விளைவாக, இருவிழிஞ்சி ஆற்றில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம், முதலில் முண்டக்கை எனும் கிராமத்துக்குள் அசுர வேகத்தில் நுழைந்தது. அதன் விளைவாக, அங்கு வீடுகளில் நிம்மதியாக நித்திரையில் இருந்தவர்கள், கனவுகள் களைந்து உறக்கத்தில் இருந்து விழித்து என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், கண் இமைக்கும் நொடிப்பொழுதில் நிலச்சரிவில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலச்சரிவால் மண்ணில் புதையாமல் உயிர் பிழைக்க முயன்றவர்களை விட்டேனா பார் என்று காட்டாற்று வெள்ளம் இழுத்துக் கொண்டு சென்றது. குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள், முதியவர்கள் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல், முண்டக்கை கிராமத்தை ஒர் நள்ளிரவின் சில மணிநேரத்திலேயே நிர்மூலமாக்கிய இருவிழிஞ்சி ஆறு, அடுத்து தனது கோரப்பசியை தீர்த்துக் கொள்ள சூரல்மலை கிராமத்துக்குள் நுழைந்து அங்கும் நிலச்சரிவை உண்டாக்கியது. அதன் விளைவாக வீடுகள் இடிந்து விழுந்து, அதன் இடிபாடுகளில் சிக்கியும், நிலச்சரிவால் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர்.

சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, காட்டாற்று வெள்ளத்தில் சூச்சிபாரா நீர்வீழ்ச்சி வழியாக அடித்து வரப்பட்ட 30 உடல்கள் போத்துக்கல் என்ற இடத்தில் சாலியாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவிக்கின்றனர். சூரல்மலைக்கும், போத்துக்கல்லுக்கும் இடையேயான தூரம் 100 கிலோமீட்டர் என்பதே, இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

பல மைல்கள் தூரம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடல்களை பெரும்பாலும் கை,. கால்கள் சிதைந்த நிலையிலும், தலைகள் தூண்டிக்கப்பட்ட மோசமான நிலையிலும்தான் மீட்புப் படையினர் கண்டெடுத்து வருகின்றனர். போத்துக்கல்லுக்கு அருகே உள்ள நீலாம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களை கண்டு அவர்களின் உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் கல்நெஞ்சையும் கணக்க செய்யும் விதத்தில் உள்ளது.

வயநாடு மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் கேட்டு கொண்டிருக்கும் வேளையில், சூரல்மலையில் மட்டும் சுமார் 200 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும், மேம்பாடி, முண்டக்கை, சூரல்மலை ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த 1000 -க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தங்களது உற்றார், உறவினர்களை இழந்து தவிப்பவர்களின் இதயத்தில் இடியாய் இறங்கி உள்ளது.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் என மத்திய, மாநில அரசுகள் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. நிலச்சரிவில் உயிர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 'இந்த துயரமான நிகழ்வில் இருந்து மக்களை மீட்க தங்களாலான அனைத்தையும செய்வோம்' என்று கூறியுள்ளார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். ' வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசின் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுபோன்ற இயற்கை பேரிடர் தருணங்களில் மீட்புப் பணிகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண ஏற்பாடுகளை செய்வதும் தான் ஒர் அரசின் முதல் கடமையாக இருக்க முடியும். ஆனால், மலையும், மலைச் சார்ந்த இடமுமான கேரள மாநிலத்தில் பருவமழை காலத்தில் நிலச்சரிவும், பெருவெள்ளமும் ஏற்படுவது ஒன்றும் அசாதாரண நிகழ்வல்ல என்றுதான் கூற வேண்டும். கனமழை காலங்களில் ஏற்படும் இதுபோன்ற இயற்கை பேரிடர்களுக்கு மனித உயிர்கள் பலியாகாமல் இருப்பதற்கான தற்காப்புப் பாடத்தை இன்னும் கற்க வேண்டும் என்ற படிப்பினையை வயநாடு நிலச்சரிவு எனும் பெருந்துயரம் கடவுள் தேசத்து மக்களுக்கு அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க:கேரளா முதல் குவஹாத்தி வரை... இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மோசமான நிலச்சரிவுகள்!

ABOUT THE AUTHOR

...view details