தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்.. 'முடா' வழக்கில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி! - Setback for CM Siddaramiah - SETBACK FOR CM SIDDARAMIAH

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்ட விரோதமாக வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவின்பேரில், முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடுக்க அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி வழங்கியிருந்தார்.

சித்தராமையா
சித்தராமையா (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 2:01 PM IST

Updated : Sep 24, 2024, 2:08 PM IST

பெங்களூரு:மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா), தனது மனைவிக்கு சட்டவிரோதமாக வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தன்னிடம் விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அளித்த ஒப்புதலை எதிர்த்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கர்நாடக மாநிலம், மைசூரு நகரின் பிரதான இடத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, 'முடா' சட்டவிரோதமாக 14 இடங்களை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுவின் பேரில், முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தரப்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவின் கீழ் விசாரணை நடத்தவும், 2023 பாரதிய நாகரிக் சுரகா சன்ஹிதா பிரிவு 218-ன் கீழ் வழக்கு தொடரவும் ஆளுநர் அளித்துள்ள அனுமதியின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்! - Tirupati Laddu controversy

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஆளுநர் அளித்த அனுமதியின்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எந்தவிதமான துரித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என முதல்வர் சித்தராமையாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு, "ஆளுநரின் நடவடிக்கைகளில் எந்த தவறும் இல்லை. சொல்லப்பட்ட உண்மைகள் தொடர்பாக விசாரணை தேவை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை கர்நாடக பாஜக வரவேற்றுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சத்யமேவ ஜெயதே, தலித்துகளின் நிலத்தை முறைகேடாக அபகரித்து ஏழைகளுக்குச் சேர வேண்டிய இடங்களை தனதாக்கிய முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஊழலை மறைக்க கீழ்மட்ட அரசியலை மேற்கொண்டனர். ஆனால், ஆளுநரின் நடவடிக்கையை உறுதி செய்த நீதிமன்றம், ஊழலுக்கு இந்தியாவில் இடமில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்டம், அரசியல் சாசனம், நீதிமன்றம் ஆகியவற்றின் மீது சித்தராமையாவுக்கு மரியாதை இருந்தால், அவர் தனது ஊழலைத் தொடராமல், நீதிமன்றத் தீர்ப்புக்கு பணிந்து, உடனடியாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Sep 24, 2024, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details