பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்பி ஆபாச வீடியோ வழக்கில், பெண்ணைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ எச்.டி ரேவண்ணாவை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாச வீடியோ விவகாரத்தில் பெண்ணைக் கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை மே 8ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலீஸ் காவல் இன்றுடன் (மே.8) நிறைவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது காவலை நீட்டிக்கும்படி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எச்.டி ரேவண்ணாவை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி ரேவண்ணாவின் ஜாமீன் மனு நாளை (மே.9) விசாரணைக்கு வர உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக அவரது மகன் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் கே.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஆள்கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய எச்.டி ரேவண்ணாவின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து மே.5ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ரேவண்ணாவை கைது செய்தனர். மேலும், ஆபாச வீடியோ வழக்கில் ஜாமீன் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதேநேரம் ரேவண்ணாவின் மனுவை எதிர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் காவலில் இருக்கும் எச்.டி ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை அணுக ரேவண்ணா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதா.. பொறுத்துக் கொள்ள முடியாது" - சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்! - Sam Pitroda Racist Remarks