ஸ்ரீநகர்:வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக உளவுத் துறையினர் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். அதன் பேரில், நேற்று (நவ.5) மாலை பாதுகாப்புப் படையினர் அந்த இரண்டு மாவட்டங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பந்திபோரா மாவட்டத்தில் உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் கெட்சன் வனப் பகுதிக்குள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு பதிங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் ஒரு பயங்கரவாதி சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும், அந்த கைது செய்யப்பட்ட பயங்கரவாதி யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மூத்த பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.