புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து, புதுச்சேரி சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாத அரசு செலவினங்களுக்கு மட்டும் 4,634 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டில் அரசின் கூடுதல் நிதி செலவினங்களுக்கான ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களின் ஏடுகள் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், அலுவல்களை முடித்து சபை நடவடிக்கை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி மாநில அரசின் திட்டக்குழு கூட்டம், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.