ஹைதராபாத்:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 என விண்வெளித்துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வரிசையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட ககன்யான் திட்டத்திற்காக சுமார் 9 ஆயிரத்து 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு ககன்யான் ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது, முதற்கட்டமாக ககன்யான் திட்டத்தின் கிரையோஜெனிக் என்ஜின் தயார் என இஸ்ரோ சமூகவலைதளமான X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இஸ்ரோவின் CE - 20 கிரையோஜெனிக் இன்ஜின் தற்போது, ககன்யான் பணிகளுக்காக மனித மதிப்பீட்டில் உள்ளது. இந்த கடுமையான சோதனை இயந்திரத்தின் திறமையை நிரூபிக்கும்" எனவும் பதிவிட்டுள்ளது. இந்த தகவல், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தற்போது கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை செய்யப்பட்டு, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் அளவுக்கு அதன் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக ஆளில்லா விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவித்துள்ளது.