புதுடெல்லி: தீபாவளி, துர்கா பூஜை சத் பூஜை உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் நவம்பர் 30ம் தேதி வரை இந்திய ரயில்வே 6 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் வலைதளத்தில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
தீபாவளி, துர்கா பூஜை மற்றும் சத் பூஜை பண்டிகைகளின் போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு, பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாகவும், தடையின்றி செல்லவும் சிறப்பு ரயில்கள் உதவும்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவு!
கடந்த ஆண்டில் பண்டிகை காலத்தில் மில்லியன் கணக்கான பயணிகளுக்காக இந்திய ரயில்வே 4,429 சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த ஆண்டு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக நாடு முழுவதுமிருந்து மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர்.
இதேபோல் தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில பயணிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் வசதியை மேலும் அதிகரிக்க, குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் வழங்கப்படும். இது, பண்டிகை நெருக்கத்தில் அதிகரிக்கும் கூட்டநெரிசலை ஈடுகட்டும் திறனை உறுதி செய்யும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் மூலம் 302 நடைகள் (டிரிப்) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
268 நடைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான முன் பதிவுகளும் துவங்கியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தெற்கு ரயில்வே 49 சிறப்பு ரயில்கள் மூலம் 130 நடைகளை இயக்கியது. இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, நடைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் கடைசி நேர கூட்டம் மற்றும் காத்திருப்பு பட்டியல்களைத் தவிர்ப்பதற்காக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. சிறப்பு ரயில்களின் விரிவான அட்டவணை, வழித்தடங்கள் மற்றும் நேரம் ஆகியவை தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளங்களில் கிடைக்கின்றன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்