நொடிக்கு நொடி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளை அறிய:https://www.etvbharat.com/ta/!elections/lok-sabha-election-results-2024
சென்னை: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. 543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? முன்னேற்பாடுகள் என்னென்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
வாக்கு எண்ணிக்கைக்காக தயார் நிலையில் இருக்கும் அதிகாரிகள் அடங்கிய குழு:தேர்தல் நடத்தும் அதிகாரி (Returning Officer) முன்னிலையில், வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் (CS - Counting Supervisor) , வாக்கு எண்ணும் உதவியாளா் ( Counting Assistant), நுண் பார்வையாளர்கள் (Micro Observers) உடனிருப்பர். மற்றும் அவர்களுடன், பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல் கட்சி முகவா்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோர் அவர்களுக்கு ஒதுககப்பட்ட இடத்தில் இருப்பார்கள்.
வாக்குப்பதிவுக்கு (Voting)பின் நடந்தவை:வாக்குப்பதிவுக்கு பின்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தபால் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிறப்பு பாதுகாப்புடன் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
ஜூன் 4 ம் தேதி நடக்க இருப்பவை: பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் இன்று அதிகாலை 5 மணிக்குள் வந்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்படும். வாக்குப் பெட்டிகளில் இருக்கும் சீல்கள் அகற்றப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விவர காகிதங்கள் சரியாக உள்ளதா என்பது சரிபார்க்கப்படும். அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பவர் (Returning Officer) வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் மையத்திற்கும் பொறுப்பாளராக இருப்பார். இவரை அரசுடன் கலந்து ஆலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கிறது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் யார் யார் அனுமதிக்கப்படுவார்கள்:மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அதிகாரிகள், அரசியல் கட்சி முகவா்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதில் வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் (CS - Counting Supervisor) , வாக்கு எண்ணும் உதவியாளா் ( Counting Assistant), நுண் பார்வையாளர்கள் (Micro Observers) ஆகியோர் மட்டுமே முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவர்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டவை: அதேபோல, வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், லேப்டாப், டேப்லெட்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பதையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தவிர்த்து யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். கட்சியின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தடுப்புகளுக்கு வெளியே இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணித்துக் கொள்ளலாம்.
வாக்கு எண்ணிக்கை மேசைகள் இப்படித்தான் இருக்கும்:குறிப்பிட்ட தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேசையிலும் கீழே இருக்கும் படத்தில் கண்டவாறு, வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் (CS - Counting Supervisor) , வாக்கு எண்ணும் உதவியாளா் ( Counting Assistant), நுண் பார்வையாளர்கள் (Micro Observers) ஆகியோர் இருப்பார்கள். இது தவிர தபால் வாக்குகளுக்கு தனியாக மேசைகள் போடப்பட்டிருக்கும். தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மற்றும், உதவி அலுவலர் (ARO) இந்த அறையில் இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். இவர்களைத் தவிர தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் ஒருவரும் பணியில் இருப்பார்.
வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்: காலை 8 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகளை ஒரு மணி நேரத்தில் எண்ணி முடித்த பின்னர் முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியிடப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு (EVM) பெட்டியில் வாக்குகளை எண்ணத் தொடங்கலாம் என முகவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி , ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல்கள் வேட்பாளா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு சென்று எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொகுதிக்கு தொகுதி மாறுபாட்டுடன் இருக்கும் எனவும் அதேபோல் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் மாறும் எனவும் தெரியவந்துள்ளது. ஒரு சுற்றுக்கு சுமார் 25 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருள்கள், உபகரணங்களான பேனா, எழுதும் அட்டை, காகிதம், இதர பொருள்கள் உள்ளதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகள் நேரடியாக வாக்கு எண்ணிக்கையை கண்காணித்தும் வருவார்கள்.
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடியுமா? :வாக்கு எண்ணிக்கையின் போது ஈவிஎம் மிஷின் வைக்கப்பட்டுள்ள சீல் அகற்றப்பட்டிருந்தாலும் அதில் கட்டப்பட்டிருக்கும் Tag அறுக்கப்பட்டு இருந்தாலும் ஈவிஎம் மிஷினில இருக்கும் வாக்கு எண்ணிக்கையும் அதே மெஷினின் VVPAT எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருந்தால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி விவி பாட்டில் உள்ள ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்த்து மீண்டும் வாக்கு எண்ணிக்கையை தொடங்கலாம்.
சென்னையை பொருத்தவரை: பொறுத்தவரையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக 357 நுண் பார்வையாளர்கள், 374 வாக்கு எண்ணும் அதிகாரிகள், 380 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் 322 அலுவலக உதவியாளர்கள் என 1433 பேர் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசு மற்றும் தேர்தல் அதிகாரியுடன் கலந்து ஆலோசனை செய்து அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
குறிப்பு: வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் முடியும் வரை முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகளை தெரிந்து கொள்ள ஈடிவி பாரத் இணையதளத்துடன் இணைந்திருங்கள்
இதையும் படிங்க:வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? அதனை எவ்வாறு அறிவது.. முழு விவரம் உள்ளே - Lok Sabha Election Exit Polls 2024