கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த அந்த மாணவி பயிற்சி மருத்துவராக பணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செமினார் ஹாலில் அவர் அரை நிர்வாணத்தில் உடல் முழுக்க காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.
பின்னர் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.
அதன்படி, பிரேத பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ''சம்பவத்தன்று பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு சஞ்சய் ராய் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் உடுத்தியிருந்த துணிகளை துவைத்துப் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். சஞ்சய் ராயை பிடிக்க சென்றபோது அவரது காலணிகளில் இரத்த கறை இருந்தது கண்டுபிடித்து அவரை கைது செய்தோம்'' என தெரிவித்துள்ளனர்.